வானொலி நினைவுகள்

பிப்ரவரி முதல் நாள் கூட்டரசு பிரதேச நாள்.  அதே நேரத்தில் அது முன்னாள் ஒலிபரப்பாளர்கள் ஒன்றுகூடும் நாளுமாகும். ஆறு ஆண்டுகளாக மலேசிய வானொலியின் முன்னாள் ஒலிபரப்பாளர்கள் பிப்ரவரி முதல் நாளன்று தவறாமல் சந்தித்து வருகின்றனர்.

கடந்த 01-02-2009-இல் ஆறாவது ஒன்றுகூடல் மனோன்மணியின் ஏற்பாட்டில் பெட்டாலிங் ஜெயா லோட்டஸ் உணவகத்தில் நடைபெற்றது.  நல்ல கூட்டம்.  முன்னாள் ஒலிபரப்பாளர்கள் பலரும் வந்து கலந்து கொண்டிருந்தனர். மலேசிய வானொலி இந்தியப் பகுதியின் முன்னாள் தலைவர் இரா.பாலகிருஷ்ணன், உடல்நலக்குறைவின் காரணமாக வெளி நிகழ்வுகளில் அதிகம் கலந்து கொள்வதில்லை.  என்றாலும் இந்த நிகழ்வுக்கு  வரத் தவறவில்லை.  வந்தவர் பேசவும் செய்தார்.

இன்னும் பலரும்கூட உடல்நலம் குன்றிய நிலையிலும் அந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.

ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் நாள் நடைபெறும் இந்த ஒன்றுகூடலுக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் வெ.ஆறுமுகம்.  2005-இல் முதலாவது ஒன்றுகூடல் நிகழ்வில் வடக்கே பினாங்கிலிருந்தும் தெற்கே ஜோகூரிலிருந்தும் முன்னாள் வானொலிப் பணியாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

ஐந்து நிகழ்வுகள் முடிந்து கடந்த 01-02-2009-இல் ஆறாவது ஒன்றுகூடல் சிற்றுண்டியுடன் தொடங்கியது.  அதன் பின்னர், வெ.ஆறுமுகம் அனைவருக்கும் வரவேற்பு கூறினார்.  மின்னல் எப்எம்மில் அறிவிப்பாளர்கள் செய்யும் சில தவறுகளையும் அவர் சுட்டிக் காட்டினார்: ‘முன்பதாக’ என்னும் சொல்லை அறிவிப்பாளர்கள் பயன்படுத்துகின்றனர்.  அது தவறு. குறுஞ்செய்தி அனுப்புவது காசை விரயமாக்கும் செயல். பிறந்த நாள் வாழ்த்துகள் அந்தக் காலத்திலிருந்து ஒலியேறி வருகின்றன. அதில் சம்பந்தப்பட்ட குடும்பத்தாரைத் தவிர வேறு யாரும் அக்கறை காட்டுவதில்லை.

முதல் முறையாக ஒன்றுகூடலுக்கு வந்திருந்த வில்லியம், எல்லாரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி என்றார்.

எம்.ஷண்முகநாதன், ஒன்றுகூடல் நிகழ்ச்சியை முதன்முதலாக தொடக்கிவைத்த ஆறுமுகத்தைப் பாராட்டிப் பரிசும் கொடுத்தார்.

கே.நாராயணன், முன்னாள் ஒலிபரப்பாளர்கள் அடிக்கடி சந்திப்பதும் நோயுற்றிருப்போரைச் சென்று காண்பதும் நல்லது என்றார்.

டாக்டர் (முனைவர்) வி.எம். பழநியப்பன், இப்படிப்பட்ட சந்திப்புகளுடன் நின்றுவிடாமல், முன்னாள் ஒலிபரப்பாளர்களின் குடும்ப நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கிடையில் உறவு வலுப்படும் என்றார்.

அச்சுத ராமையா, பணி ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆனாலும் இப்போதுதான் முதல் முறையாக வந்து கலந்து கொண்டார்.  ஒன்றுகூடலில் கலந்து கொள்வது மகிழ்ச்சி தருவதாகக் குறிப்பிட்டார்.  அண்மையில் இருதய சிகிச்சை செய்து கொண்டதாகக் கூறினார்.  தமது மகன் இருதய சிகிச்சை நிபுணராக செர்டாங் மருத்துவ மனையில் பணியாற்றுவதாகவும் இருதய நோயுள்ள நண்பர்கள் அவரது உதவியை தாராளமாக நாடலாம் என்றும், உதவுவதற்கு அவர் தயாராக இருக்கிறார் என்றும் தெரிவித்தார்.

மைதீ.சுல்தான், பாலாவின் பிறந்த நாளையொட்டி ‘மக்கள் ஓசை’ நாளேட்டுக்கு எழுதிய வாழ்த்துக் கவிதையைக் கையோடு கொண்டு வந்திருந்தார்.  அதை வாசித்தும் காட்டினார்.

இந்த ஒன்றுகூடலில் ஆர்டிம்-மிலிருந்து அதன் விளம்பரப் பிரிவு அதிகாரி ஷாபி அப்துல்லாவும் மின்னல் எப்எம் தலைவர் பார்த்தசாரதியும் மின்னல் அறிவிப்பாளர்கள் சிலரும்கூட கலந்து கொண்டிருந்தனர்.

ஷாபி பேசுகையில், மூத்த அறிவிப்பாளர்கள் ஒன்றுகூடி மின்னலின் மேன்மைக்கு ஏதாவது செய்யலாம் என்றார். அவர்களின் கருத்துகளுக்கு ஆர்டிஎம் செவிசாய்க்கக் காத்திருக்கிறது என்றார்.

பார்த்தசாரதி, முன்பு மின்னல் எப்எம் தலைவராக சிறிது காலம் இருந்து பின்னர் வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டு, இப்போது மறுபடியும் மின்னலுக்குத் தலைமை ஏற்றுள்ளார்.  அவர் இப்போது மின்னல் இழந்துவிட்ட நேயர்களின் ஆதரவைத் திரும்பப் பெறுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அது  குறித்து அவர் எடுத்துரைத்தார்.  அனைத்தையும் ஒரே நொடியில் செய்ய இயலாது என்றும் படிப்படியாக மாற்றங்களைக் கொண்டு வர எண்ணியிருப்பதாகவும் கூறினார்.  (முன்பு ஒலியேறிய,  இடைக்காலத்தில்  கைவிடப்பட்ட,  பல நிகழ்ச்சிகள் இப்போது மீண்டும் எட்டிப் பார்க்கின்றன). 

முடிவில், பாலகிருஷ்ணன் பேசினார்.  இப்போதைய தகவல் அமைச்சர்,  கருத்துகளுக்குச் செவிசாய்ப்பவராகக் காணப்படுகிறார் என்றும் மின்னலின் வளர்ச்சிக்குரிய கருத்துகளை எடுத்துரைத்தால் அவர் வேண்டியதைச் செய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.

இரவு மணி ஒன்பதளவில் ஒன்றுகூடல் முடிவுக்கு வந்தது.

 

ஒன்றுகூடலில் கலந்து கொண்ட முன்னாள் ஒலிபரப்பாளர்கள்

ஒன்றுகூடலில் கலந்து கொண்டவர்கள்

*******************************************

இப்படி ஆண்டுக்கு ஒருமுறை ஒன்றுகூடிக் கருத்துப் பரிமாற்றம் செய்வதுடன் நின்றுவிடாமல், தொடர்ச்சியான கருத்தாடலுக்கு ஒரு தளம் இருந்தால் நலமாயிருக்குமே என நினைத்தோம். அதன் பயனாக – இந்தப் பதிவு. வலைப்பதிவு வழி முன்னாள் ஒலிபரப்பாளர்கள் ஒருவரோடொருவர் தொடர்பு கொள்ளலாம். அவர்களின் நினைவுகளையும் சிந்தனைகளையும் பதிவு செய்யலாம்.  எந்த விவகாரம் பற்றியும் மனத்தில்பட்ட கருத்துகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்தலாம். அந்த வகையில் முன்னாள் ஒலிபரப்பாளர்களின் கருத்துகளும் படைப்புகளும் இங்கு வரவேற்கப்படுகின்றன.

*****************************************

கடந்த பிப்ரவரி 22-இல் லீலா பாலசுப்ரமணியத்துக்கு திவசம்.  இதற்கும் நண்பர்கள் திரளாக வந்திருந்தனர். லீலாவின் நினைவுகள் அங்குப் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

வானொலியில் தமிழிசை வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டவர் லீலா.  ‘கலப்பட’த்தை நாடு முழுவதும் எடுத்துச் சென்று நடத்தியவர் அவர்.  அவர் இசைப் பகுதியில் தமிழ்ப் பிரிவுக்குப் பொறுப்பாளராக இருந்த காலத்தில்தான் தமிழுக்கென்று தனி இசைக்குழு அமைந்து, எண்ணற்ற பாடல்களையும் இசை நிகழ்ச்சிகளையும் உருவாக்கியது.  ஏற்கனவே ஒலிப்பதிவு நாடாக்களில் இருந்த பல பாடல்கள் இசைத்தட்டுகளில் பதியப்பெற்றதும் அவரது காலத்தில்தான்.  இவ்வாறாக வானொலியில் தமிழிசையும் தமிழிசைக் கலைஞர்களும் மேன்மையுற பலவகையிலும் உறுதுணையாக இருந்தவர் லீலா.

அவர் மட்டும்தானா?  நாகசாமி பாகவதர், ரெ. சண்முகம், ந.மாரியப்பன் போன்றோரும் இசை வளர்ச்சிக்காக ஆற்றிய பங்கும் பணியும் அளப்பரியது.  இவற்றையெல்லாம் நினைவுகூர்ந்து ஒரு நூலாக வரைந்து வருகிறார் சிங்கம் ஜான்சன்.  அவரது முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறோம்.

அதேபோன்று, மற்றவர்களும் அவரவர் நினைவுப் பெட்டகத்தில் பொதிந்து கிடக்கும் பழைய, இனிய அனுபவங்களை இங்கு எடுத்துரைத்தால் அவை அந்நாளைய வானொலு ஒலிபரப்ப பற்றி இந்நாள் ஒலிபரப்பாளர்களும் பொதுமக்களும் நன்கு அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும்.  அதற்கு இந்த வலைப்பதிவு ஒரு தளமாக அமையட்டுமே!

ஆக்கம் : பி. ராமச்சந்திரன்

*************************************************

Advertisements

ஒரு பதில் to “வானொலி நினைவுகள்”

  1. செல்வராசு பொன்னன் Says:

    போற்றுதற்குரிய முயற்சி. மேலும் பல ஆக்கங்களை இந்த வலைப்பதிவில் காண ஆவலாக உள்ளேன். நம் இனத்தவருக்குப் பயன்படும் ஆக்கங்கள் இடம் பெறுவது முக்கியம்.
    செல்வராசு
    சிரம்பான்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: